நாளை ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்!!

ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 31-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு யாக பூஜைகள் நடந்து வருகிறது. 2-ந் தேதி கோ-கஜ பூஜை நடந்தது. 3-ந் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், மூர்த்தி ஹோமம் ஆகியன நடத்தப்பட்டன. 4-ந் தேதி மாலையில் முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-ம் கால யாக பூஜையுடன் நடந்தன. நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு 8-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.35 மணிக்கு கோவில் ராஜகோபுர கலசங்களுக்கும், வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் சாமி, பரிவார மூர்த்தி கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு மகா அபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்பட அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

விழாவையொட்டி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

googlefc.controlledMessagingFunction