3 மாதமாக வாடகை பாக்கி தராததால் அரசு வங்கியை இழுத்து பூட்டிய கட்டிட உரிமையாளர் ….வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி….

திருப்பூர் ;

பொதுவாக வங்கியை மூடுவது என்றால் ஆர்பிஐ அறிவிப்பாலும், மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பாலும், இல்லையெனில் வங்கி நிர்வாகம் எடுக்கும் முடிவாலும் தான் வங்கி கிளை மூடப்படும். ஆனால் திருப்பூர் அருகில் ஒரு பொதுத்துறை வங்கி கிளையைக் கட்டிடத்தின் உரிமையாளர் தனது வாடகை 3 மாதம் அளிக்காத காரணத்திற்காக அசால்ட்டாகப் பூட்டுப்போட்டு உள்ளார்.

இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் காலதாமதம் செய்ததாலும், மூன்று மாதங்களாக வாடகை செலுத்தாததாலும் வீரபாண்டியில் உள்ள பொதுத்துறை வங்கியின் கிளையைக் கட்டிட உரிமையாளர் வங்கியை பூட்டி விட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி தாலுக்கா கணபதிபாளையத்தில் உள்ள வணிக வளாகத்தில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வந்தது. 15 ஆண்டுக் குத்தகை ஒப்பந்தம் மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை.  

மும்பை மற்றும் சென்னையில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கட்டிட உரிமையாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போன நிலையில், வங்கி அதிகாரிகளும் எவ்விதமான உதவியும் செய்யாத காரணத்தால் திங்கள்கிழமை இரவு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையைப் பூட்டிவிட்டு சென்றார் செவ்வாய்க்கிழமை காலையில் வங்கி அதிகாரிகள் வந்து நிலையில் கட்டிட உரிமையாளர் போட்டிருந்த மற்றொரு பூட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வாடகை செலுத்தாததாலும், ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும் கட்டட உரிமையாளர் இதைச் செய்ததாகவும் கூறியுள்ளார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வங்கி அதிகாரிகள் மற்றும் கட்டிட உரிமையாளர் மத்தியிலான பேச்சுவார்த்தையில் வங்கி தரப்பு வற்புறுத்தலின் காரணமாகக் கட்டிட உரிமையாளர் பூட்டை திறந்தார்.

ஆனால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அவர்கள் மீண்டும் கட்டிட உரிமையாளரை அணுகியதைத் தொடர்ந்து மாலையில் மின் இணைப்பை தந்தார் . விரைவில் நிலுவைத் தொகையைச் செலுத்தி, குத்தகையைப் புதுப்பித்துத் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது.


Leave a Reply