பட்டா மாற்றி தர லஞ்சம் வாங்கிய VAO.. பொறி வைத்து தூக்கிய லஞ்சஒழிப்பு துறை போலீஸ் ….

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் (வயது 35). அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக சதீஷ்குமாரை அனுகியுள்ளார்.

அப்போது அவர் பட்டா மாறுதல் செய்து தர ரூ.4 ஆயிரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வராஜ், இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.

அதன்படி நேற்று மாலை 4 மணி அளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சதீஷ்குமாரை கைது செய்தார்கள்.

மேலும் லஞ்சம் பெற இடைத்தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரும் கைதானார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகரில் இருக்கும் சதீஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியகிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply