புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் III இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று வரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் புதிய மன்னராக அவர் அறிவிக்கப்பட்டார்.

அவரின் தாயாரும் மகாராணியுமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, சிம்மாசனம் வெல்ஸின் முன்னாள் இளவரசரான சார்லசுக்கு சென்றுள்ளது. லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

மன்னர் சார்லசுடன் அவரது மனைவி ராணி கன்சார்ட் கமிலா மற்றும் அவரது மகனும் வாரிசுமான வேல்ஸின் புதிய இளவரசர் வில்லியம் ஆகியோர் இணைந்தனர். இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலகிலேயே ராணியாக நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ள ராணி எலிசபெத்துக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply