கருத்து மட்டும் சொல்லுங்கன்னா…. எங்களுக்கே  அட்வைஸ் பண்றீங்களா… ஒப்பந்ததாரர்களிடம் சீரிய தமிழக அமைச்சர்…

சென்னை:

எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்துள்ளார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.

மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் சென்னைக்கு வர வேண்டிய நீர் வராமல் இருப்பதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற தேசியளவிலான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் இதனைக் கூறினார். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் கட்டுமானப் பணி மேற்கொள்ள மத்திய அரசு 3 ஆண்டுகளாக அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் சென்னைக்கு வர வேண்டிய 250 டிஎம்சி தண்ணீர் வீணாவதாகவும் எனவே கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முறையான திட்டத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் மைக்கை பிடித்து அதிகாரிகளுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார். இதைக் கேட்ட அமைச்சர் நேருவின் முகம் கோபத்தில் சிவந்தது.

இதையடுத்து எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் நேரு, கருத்து மட்டும் சொல்லச்சொன்னால் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறீர்களா என எகிறினார். ஒப்பந்த வேலைகளை விரைந்து முடிப்பதற்கான வழியை பார்க்குமாறும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் போது உள்ள பிரச்சனைகள், சிரமங்களை மட்டும் கூறுமாறும் ஒப்பந்ததாரர்களிடம் கூறினார் அமைச்சர் நேரு.

அமைச்சர் நேரு கடுகடுப்புடன் பேசியதை பார்த்து அதிகாரிகளுக்கு அறிவுரை சொன்ன ஒப்பந்ததாரர் ஆடி போய்விட்டார். இதனிடையே மற்ற ஒப்பந்ததாரர்கள் யாரும் கருத்துச் சொல்லக் கூட விரும்பாமல் கடைசி வரை அமைதியாக அமர்ந்துவிட்டு கலந்து சென்றனர்.

Leave a Reply