காதல் ஜோடிகளை குறி வைத்து போலீஸ் என கூறி மிரட்டி கொள்ளையடித்து வந்த கில்லாடி திருடன்..

காதல் ஜோடிகளை குறி வைத்து போலீஸ் என கூறி மிரட்டி கொள்ளையடித்து வந்த கில்லாடி திருடன்..

திருவள்ளூர் ;

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் தேதி இரவு 400 அடி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் இளம் ஜோடி காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி, ரோட்டில் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சிசிடிவி மூலம் காவல் ஆய்வாளர் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார் எனக்கூறி, காரில் இருந்த இளம்ஜோடியிடம் செல்போன் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை மிரட்டி பறித்து சென்றார்.

இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில்  நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.இதனையொட்டி  கொள்ளையனை பிடிக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில், பூவிருந்தவல்லி காவல் உதவி ஆணையாளர் முத்துவேல் பாண்டியன்   தலைமையில் தனிப்பட அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்ததில், தமிழகம் முழுவதும் போலீஸ் எனக் கூறி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிவராமனை பிடிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டனர்.

காதல் ஜோடிகளை குறி வைத்து போலீஸ் என கூறி மிரட்டி கொள்ளையடித்த திருடன்

அதன்படி தனிப்படை காவலர்கள் இளம் காதல் ஜோடி போல், 400 அடி பைபாஸ் சர்வீஸ் சாலையில், 3 இடங்களில் கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில்  நின்றிருந்தனர். வெள்ளவேடு டோல்கேட் அருகில், காரில் அமர்ந்திருந்த காவலர்களிடம் இரவு 08.00 மணிக்கு வந்த கொள்ளையன் சிவராமன் வழக்கம்போல் ஆண் போலீசாரிடம்  காவல் ஆய்வாளர் அழைக்கிறார் எனக்கூறியுள்ளார்.

அந்த காவலர் காரிலிருந்து இறங்கி சிவராமனை பிடிக்க முயலும்போது, சிவராமன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி போலீசாரை தட்டிவிட்டு தன்னுடைய பல்சர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

ஏற்கனவே 400 அடி சாலையில் இருபுறங்களிலும் சாதாரண உடையில் காத்திருந்த தனிப்படை போலீசார், பூந்தமல்லி பைபாஸ் சாலையில்  சிவராமனை விரட்டிச் சென்று 200 அடி ரோட்டில் உள்ள மதுரவாயல் டோல்கேட்டில் வைத்து மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிவராமன் மீது இது போன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மொத்தம் 45 கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து சிவராமனிடமிருந்து இருசக்கர வாகனம், 10 சவரன் நகைகள் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் ஜோடிகளை மட்டும் குறி வைத்து போலீஸ் என கூறி கொள்ளையடித்து வந்த திருடன் பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply