இறந்து போனதாக படையல் போடும் போது உயிருடன் வந்த பாட்டி…. உறவினர்கள் ஆனந்த கண்ணீர் …

இறந்து போனதாக படையல் போடும் போது உயிருடன் வந்த பாட்டி…. உறவினர்கள் ஆனந்த கண்ணீர் …

செங்கல்பட்டு;

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்திரா – சுப்பிரமணி. தற்போது 72 வயதாகும் மூதாட்டி சந்திராவின் கணவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வால் இறந்து விட்டார். இதனால் அவர் தனது மகன் வடிவேலுவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூதாட்டி சந்திரா சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்கு சென்றுள்ளார். போகும் முன் தனது மகனிடம் தகவலும் கொடுத்திருக்கிறார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் மூதாட்டி வீடு திரும்பவில்லை. எனவே சந்திராவின் மகன் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து புகார் கொடுக்கலாம் என்று மகன் வடிவேலு எண்ணிய நிலையில், தாம்பரம் இடையிலான இரயில் தண்டவாளத்தில் வயதான மூதாட்டி ஒருவரின் சடலம் இரயில்வே அதிகாரிகளால் மீட்பட்டுள்ளதாக, வடிவேலுவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து பதறியடித்து சென்று விசாரித்தார். பின்னர் அந்த மூதாட்டியின் சடலத்தை கண்ட மகன், அது தனது தாய் என்று அடையாளம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டியின் சடலம் வடிவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அதனை வீட்டிற்கு எடுத்து சென்று உற்றார் – உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு இறுதி சடங்கு முடிந்து சடலம் தகனம் செய்யப்பட்டது. மேலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டப்பட்டது.

இறந்து போனதாக படையல் போடும் போது உயிருடன் வந்த பாட்டி

இந்த நிலையில், அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவர்கள் வழக்கப்படி இறந்துபோன சந்திராவுக்கு இன்று காலை படையல் படைக்கப்பட்டது. அந்த சமயத்தில் உயிரிழந்து , உடல் தகனம் செய்யப்பட்டதாக கூறப்படும் மூதாட்டி சந்திரா திடீரென்று உயிருடன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக்கண்ட அவரது உறவினர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் ஆனந்த கண்ணீர் வடித்தனர் .

மேலும் அவர் வீட்டிற்கு வந்ததும் மகன் ஆனந்த அதிர்ச்சியில் இருந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதோடு தாங்கள் பெற்றது தனது தாயின் உடல் இல்லை என்றும் மகன் கூறினார்.

இதையடுத்து அவர்கள் மூதாட்டி சந்திராவிடம் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். மேலும் இறுதிசடங்கு செய்யப்பட்ட மூதாட்டியின் சடலம் யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்ததாக கூறி இறுதிசடங்கு நடத்தப்பட்ட மூதாட்டி திடீரென்று உயிருடன் வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply