அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற பிச்வாய் சில்க் புடவைகள்…….

அனைத்து பருவங்களிலும் அணியக் கூடிய வகையில் வந்திருக்கும் ஜூட் லினன் சில்க் புடவைகள் மிகவும் நேர்த்தியான தோற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மிருதுவான பிளெயின் வண்ணங்களில் வரும் புடவைகளுக்கு தலைப்பில் வரும் குஞ்சம்(டேஸில்ஸ்) கூடுதல் அழகைத் தருவதாக இருக்கின்றது.மிகவும் மிருதுவான பீச், சந்தனம், பிஸ்தா, ஆரஞ்சு,கிரே, பிங்க் வண்ண புடவைகளுக்கு போச்சம்பள்ளி மற்றும் இக்கத் டிசைன்களை டிஜிட்டல் பிரிண்டிங் செய்து பிளவுஸ் பீஸாகத் தருகிறார்கள்.

இந்த பிளவுஸ் பீஸ்கள் அந்தப் புடவைக்கு காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் இருப்பது போல் கொடுக்கப்பட்டிருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது. இதுபோன்ற லினன் ஜூட் புடவைகள் பெயர் மற்றும் வண்ணத்திற்கு ஏற்றது போலவே மிகவும் மிருதுவாக, மென்மையாக இருக்கின்றன. இந்தப் பிளெயின் புடவைகளில் கோல்டன் ஜரி கட்டங்கள் வருவதுபோல வடிவமைக்கப்பட்டு வருவது கூடுதல் அழகாக இருக்கின்றது. புடவை தலைப்பில் வரும் குஞ்சங்களும், கோல்டன் மற்றும் புடவை நிறத்தில் வருவதுபோல செய்திருப்பது மிகவும் அருமையாக இருக்கின்றது.

பிச்வாய் சில்க் புடவைகள்

மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது.உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம். காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது. உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும்.கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

சாஃப்ட் காதி சில்க் புடவைகள்

பிளெயின் வண்ணப் புடவைக்கு தலைப்பு மற்றும் பார்டர் பூ டிசைன் வருவதுபோல் வடிவமைத்து தலைப்பில் டேஸில்ஸ் எனப்படும் குஞ்சம் தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது இந்தப் புடவைக்கு கூடுதல் அழகைத் தருகிறது. மஞ்சள், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் போன்ற வண்ணங்களை உடலுக்குத் தந்து பார்டர் மற்றும் தலைப்பில் பெரிய பூ டிசைன் இருப்பது போன்று தயாரிக்கப்படும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகளிலேயே இக்கத் டிசைன்களை மிகவும் அழகாகத் தந்திருக்கிறார்கள். பார்டரும், பிளவுஸும் ஒரே டிசைனில் இருப்பது அருமையாக இருக்கின்றது. அணிந்தால் உடலுடன் ஒட்டி வரும் இந்தப் புடவைகளை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். உடல் முழுவதும் பிரிண்ட்கள் இருக்க பார்டர் மற்றும் பிளவுஸ் பிளெயினாக இருப்பது போன்று வரும் புடவைகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் வரும் இந்த சாஃப்ட் காதி சில்க் புடவைகள் வெளியில் உடுத்திச் செல்வதற்கு ஏற்றவையாக உள்ளன.

சாட்டின் சில்க் புடவைகள்

தொட்டாலே வழுவழுப்பாகவும், மெத்தென்றும் இருக்கும் இந்த சாட்டின் சில்க் புடவைகள் எப்படிப்பட்ட உடல்வாகு இருக்கும் பெண்களும் அணியும் பொழுது அவர்களை சற்று குறைந்த உடல்வாகு இருப்பதுபோல் காட்டக்கூடிய புடவை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த புடவைகளில் ஏராளமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் வருவதால் எதை எடுப்பது எதை விடுவது என்று யோசிக்கத் தோன்றுகிறது. அதிலும் இந்த புடவைகளில் வரும் டிஜிட்டல் பிரிண்ட்டுகள் இந்தப் புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டுகின்றன.சாட்டின் சில்க் புடவைகளுக்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. இந்தப் புடவைகளின் தலைப்பில் மட்டும் டிசைன்கள் வந்து உடல் முழுவதும் பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது, தலைப்பில் வரும் பெரிய டிசைன் பார்டரிலும் அதே பெரிய அளவில் வருவது, தலைப்பில் வரும் டிசைன் இரண்டு பக்க பார்டரி லும் வந்து உடல் பகுதி பிளெயினாக காண்ட்ராஸ்ட் வண்ணத்தில் வருவது என ஒவ்வொரு புடவையும் மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் விற்பனைக்கு வந்துள்ளன.

Leave a Reply