யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்க முடியாது – மின்சார வாரியம் திட்டவட்டம்…

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது. இந்த அறிவிப்பில் விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படு வதாகவும் மின் நுகர்வோர் சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் மின்சார கணக்கீடு செய்வதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மின்சார வாரியத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தாக்கல் செய்த பதில் மனுவில், வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால், முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளதாகவும், கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பழைய மின்கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின்கட்டணம் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் அதிக நேரம் இருப்பதால் மின்கட்டணம் உயர்ந்ததாகவும் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்திற்கு முந்தைய மாத கட்டணத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும் முந்தைய மாதம் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க முடியாது என்றும் மின்சார வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.