“அதிமுக-வில் டிஸும்.. டிஸும்..” முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் யுத்தம்…

சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக யாரை முன்நிறுத்துவது என்ற விவாதம், தற்போது எழுந்துள்ளது. இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, கூறி வருகின்றனர். அதேநேரம், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்பதால், பன்னீர்செல்வத்தையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தலை சந்திக்க வேண்டும் என, அவரது ஆதரவு வட்டாரம் கூறி வருகிறது.

இது, வெளிப்படையான மோதலாக உருவெடுக்காத நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு, நேற்று முன்தினம், செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,- – எம்.எல்.ஏ.,க்கள் கூடி, முதல்வரை தேர்வு செய்வர்’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘இ.பி.எஸ்., என்றும் முதல்வர்; இலக்கை நிர்ணயித்து விட்டு, களத்தை சந்திப்போம். ‘இ.பி.எஸ்.,சை முன்நிறுத்தி, தளம் அமைப்போம்; களம் காண்போம்; வெற்றி கொள்வோம்; 2021ம் நமதே’ என, பதிவிட்டுள்ளார்.

இது, அ.தி.மு.க., வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் முதல்வர் வேட்பாளர் என, ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., ஆதரவாளர்களிடம், மோதல் உருவாகி உள்ளதை, இது, அம்பலப்படுத்தி விட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையேல், இதுவே பெரிய விவாதமாக வெடித்து, மீண்டும் கட்சியில் பிளவை ஏற்படுத்தி விடக்கூடும் என, கட்சி வட்டாரத்தில் அஞ்சப்படுகிறது.

Related Posts