2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும் – மத்திய மந்திரி எல்.முருகன் !!

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய மந்திரி எல்.முருகன் முகாம் அலுவலகம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக டாஸ்மாக் கடை திறந்து மக்களை தி.மு.க. அரசு மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது.

ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று தமிழக அரசுக்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அரசு கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க தி.மு.க. அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி அதனை தி.கவும், தி.மு.க.வும் அழிக்க நினைத்தால் அது முடியாது. இன்றைக்கு தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது.

தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரும் இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

ஒரே நாடு, ஒரே சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. அரசு கட்டி முடித்துள்ளது. 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *