சென்னை:
பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஹெச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். தொடர்ந்து, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குளித்தலை திமுக எம்எல்ஏ ஆர்.மாணிக்கத்தையும் சந்தித்து உடல்நலம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.