மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை திமுக அமைத்திட வாய்ப்பைத் தாருங்கள்; திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட பாடுபட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
“2021 தேர்தலில், திமுக 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப் பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம் என்று வேண்டினேன்.

நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை திமுக அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட பாடுபட வேண்டும்.” என முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 ஆம் தேதி கழக மாநாடு நடைபெறவிருக்கிறது.

75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே.

தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப் பதற்கான உழைப்பு.

இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளை கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கினற வாய்ப்பு, உங்களால் கழகத்தின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.

அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

மண்டலவாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், BLA2, BLC, BDA பயிற்சி மாநாடுகள் எனத் தேர்தலை முன்னிட்டு நாம் நடத்திக்காட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் கருப்பு சிவப்பு படையாய்க் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.

இவற்றைத் தொடர்ந்து, மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான கழக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது.

அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘திமுகழகத்திற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான்.

தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *