துபாய்:
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 652 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் தொடர்கிறார்.
அதேவேளையில் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 157 ரன்கள் விளாசிய நியூஸிலாந்து அணியின் புரூக் ஹலிடே 644 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்றொரு நியூஸிலாந்து வீராங்கனையான மேடி கிரீன் 584 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தை அடைந்துள்ளார்.