கீவ்:
98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் சீன் பென் வென்றார்.
இருப்பினும் அந்த விழாவை தவிர்த்துவிட்டு ரஷ்ய படையெடுப்பால் போர் சூழல் நிலவும் உக்ரைனுக்கு அவர் சென்றார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது.
65 வயதான நடிகர் சீன் பென், ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
இந்திய நேரப்படி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விழா நேற்று (மார்ச் 16) காலை நடைபெற்றது. இந்த விழாவை அவர் தவிர்த்துவிட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க அவர் புறப்பட்டார்.
கடைசி வரை தனது பயண திட்டத்தை சீன் பென் தெரிவிக்காமல் இருந்தால். இந்நிலையில், உக்ரைன் அரசின் ரயில்வே துறை பகிர்ந்து சமூக வலைதள பதிவில் அவர் ரயிலை பயணிக்கும் பதிவு பகிரப்பட்டது. “ஆஸ்கருக்கு பதிலாக உக்ரைன் சீன் பென் தேர்வு செய்தார்.
இதை இப்போது நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம்” என அதற்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சீன் பென் உடனான சந்திப்பை சமூக வலைதள பதிவு மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகிர்ந்தார்.
இந்த சந்திப்பு கீவ் நகரில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்றதாக தகவல். இருப்பினும் இந்த சந்திப்பில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
“சீன், உங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உக்ரைனின் உண்மைத் தோழர் என்பதை நாங்கள் அறிவோம்.
போரின் முதல் நாள் முதலே நீங்கள் உக்ரைன் பக்கம் உறுதுணையாக நிற்கிறீர்கள். இன்று வரை அது அப்படியே உள்ளது” என ஜெலன்ஸ்கி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு குறித்து ஆவணப்படம் ஒன்றையும் நடிகர் சீன் பென் பதிவு செய்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் இடையிலான நான்கு ஆண்டு கால போருக்கு மத்தியில் பல்வேறு முறை உக்ரைன் சென்று, தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
மூன்று முறை ஆஸ்கர் விருதை வென்ற அவர், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.