ஹாமில்டன்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் தொடரில் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே 49 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்தார், டாம் லேதம் 11, டிம் ராபின்சன் 1, நிக்கி கெல்லி 21, மிட்செல் சான்ட்னர் 20, ஜேம்ஸ் நீஷம் 8, கோல் மெக்கோன்சி 18, ஜோஷ் கிளார்க்சன் 26 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் 107 ரன்களுக்கு சுருண்டது.
அந்த அணியின் வியான் முல்டர் 16, கானர் எஸ்டர்ஹுய்சன் 8, டோனி டி ஸோர்ஸி 1, ரூபின் ஹெர்மான் 19, ஜேச் ஸ்மித் 12, டியான் பாரஸ்டர் 10, ஜார்ஜ் லிண்டே 33, ஜெரால்டு கோட்ஸி 2 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
நியூஸிலாந்து அணி தரப்பில் லாக்கி பெர்குசன், பென் சியர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்களையும், கோல் மெக்கோன்சி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக டேவன் கான்வே தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி வரும் 20-ம் தேதி ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.