நியூயார்க்:
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார்.
இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20 மணி) இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி முதலாவதாக, எஸ் அண்ட் பி 500 பியூச்சர் குறியீட்டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், இரண்டாவதாக கச்சா எண்ணெய் பியூச்சர் சந்தையில் ரூ.1,615 கோடி மதிப்பிலான விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, உலகளவில் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகம் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் முதலீடு செய்தது சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரம்பின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தை 2.5% உயர்ந்தது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகச் சரிந்தது.
இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்ளார்.
பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன் மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
போர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இவ்வளவு துல்லியமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதால், அரசின் ரகசியத் தகவல்கள் முன்கூட்டியே கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் இப்புகார்களை மறுத்துள்ளார்.
‘‘அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.