மேட்டூர்:
அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி 8-வது முறையாக போட்டியிடுகிறார்.
இதனையொட்டி, நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரான நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தேமுதிகவுக்கு அரை சதவீதம்தான் வாக்கு வங்கி உள்ளது. தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதாகச் சொன்னேன். அதற்குள் அவர்கள் மனநிலை மற்றும் அணி மாறிவிட்டார்கள்.
உதயநிதி ஸ்டாலின் சிபிஎஸ்சி பள்ளி நடத்தி வருகிறார். அதில் மும்மொழிப் பாடமும் நடத்தப்படுகிறது.
தங்களுக்கு தேவை என்றால் மட்டும் எந்த மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள். தமிழகத்தில் நடைபெறுவது சட்டப்பேரவை தேர்தல்.
மக்களவை தேர்தல் அல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டு பேச வேண்டும்.
ஒன்று, இரண்டு திட்டங்கள் விடுபட்டிருந்தால் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விடுபட்டது அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.
15-ம் தேதி கன்னியாகுமரியில் பிரதமர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கு பெறுகிறேன்.
ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலை விட அமலாக்கத் துறை ஆதாரத்துடன் தமிழக டிஜிபியிடம் அனுப்பிய ஊழல் குறித்து வழக்குப் பதிவு செய்யாமல் இருந்தனர்.
அதிமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இதன்மீது அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சி யில்தான் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் அதிமுக பல்வேறு திட்டங்களை தந்தகட்சி.
தற்போது மிகப்பெரிய வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது. ஆ.ராசா தொடர்பாக வெளியான ஆடியோ இந்திய அளவில் வைரலானது.
கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகவும், பட்டியல் இனமக்கள் பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும், ஆடியோவில் பேசப்பட்டிருந்தது.
அது குறித்து தான் நான் கருத்துக் கூறினேன். இந்த விவகாரத்தில் ராசா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு என் மீது பாய்வதில் என்ன இருக்கிறது? அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதிமுக அதிக இடங்களில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.