கோயிலுக்குப் போகாதவர்களுக்கு, கோயிலைப் பற்றி கவலைப் படாதவர்களுக்கு, நெற்றியில் பொட்டு வைப்பதே தவறு என்று கருதுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது – திருவையாறில் ஜி.கே.வாசன் பேச்சு!!

திருவையாறு;
“கோயிலுக்குப் போகாதவர்களுக்கு, கோயிலைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கு, நெற்றியில் பொட்டு வைப்பதே தவறு என்று கருதுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருவையாறு அமமுக வேட்பாளர் வேலு.கார்த்திகேயன், அரியலூர் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து திருவையாறு மற்றும் திருமானூரில் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது.

கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம், பாலியல் தொந்தரவுகளை திமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசை திமுக எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரிக்கட்சியாக பார்ப்பதால்தான் தமிழகம் வளர முடியவில்லை.

ஆன்மிக ஈடுபாடும், கோயில்களும் நிறைந்த இந்தப் பகுதியில் கோயிலுக்குப் போகாதவர்களுக்கு, கோயிலைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கு, நெற்றியில் பொட்டு வைப்பதே தவறு என்று கருதுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது.

மாறாக, அனைத்து மதமும் சமம் என்று கருதுபவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எனவே, பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் மலர வேண்டும். அப்படி அமைந்தால், தமிழக அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் ஒரே கருத்துடன் செயல்படும். இதனால் தமிழகம் சிறந்து விளங்கும்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்களிடம் வந்து பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை நம்ப வைத்து வெற்றி பெற்று, அவற்றை நிறைவேற்றாமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டது.

ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள்.

இந்தியாவிலேயே மகளிருக்கு ஒரு மாநிலத்தில் அதிக திட்டங்கள் கிடைத்தது என்றால் அது ஜெயலலிதா ஆட்சியில் தான். அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திய பெருமை பழனிசாமியையே சேரும்.

மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் இருந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும்.

அதுதான் உண்மையான வளர்ச்சி. எனவே, அதற்கு தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *