சென்னை:
“மகளிரின் ஒவ்வொரு வாக்கும் திமுக-வை வீட்டுக்கு அனுப்பக்கூடிய வாக்காக இருக்க வேண்டும்.
மகத்தான சக்தி கொண்ட மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அவருக்கு மிகப்பெரிய கடலை மிட்டாய் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில், காமராஜரின் பொற்கால ஆட்சியைப் போல் பெண்களுக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மீண்டும் பெண்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படும்.
மகளிரின் ஒவ்வொரு வாக்கும் திமுக-வை வீட்டுக்கு அனுப்பக்கூடிய வாக்காக இருக்க வேண்டும்.
மகத்தான சக்தி கொண்ட மகளிருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது அவமானகரமானது.
போதைப் பொருள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சியின் காரணமாக பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
இந்த தொகுதி வளர்ச்சிபெற, புதிய திட்டங்கள் வர, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்கள் பாதுகாப்பாக நடைபெற நயினார் நாகேந்திரனுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.