சென்னை:
‘திமுக இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தை தொடக்கூட முடியாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூர் மாவட்டம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
பெரும்பாலும் தமிழகத்தின் கிராம தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் அமர்ந்திருக்கும்.
ஏனெனில் தமிழகத்துக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். அப்படி வரக்கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தக்கூடிய தேர்தல்தான் தற்போதைய தேர்தல்.
ஓராண்டுக்கு முன்பு இதே திருவள்ளூரில் நின்றுதான், மத்திய பாஜக அரசை நோக்கி எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள், தமிழகம் என்றைக்கும் டெல்லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்தான்’ என்று சவால் விட்டேன்.
அந்த சவாலில் தமிழகம் வெற்றி பெறவேண்டும். அதற்கு திமுக கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்தே ஆக வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தனர்.
தனக்கு பதவி கொடுத்தால் போதும், சம்பந்திக்கு ரெய்டு நடக்காமல் இருந்தால் போதும் என்று இருக்கிறார் பழனிசாமி.
இதற்காக அவர் கொடுத்த விலைதான் தமிழகத்தின் உரிமைகள். பழனிசாமி என்ற அடிமை இருக்கும் தைரியத்தில் அதிமுகவை வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடத்துவோம், இந்தியை திணிக்கும் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துவோம் என, பாஜகவினர் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும். அடிமைகளை விரட்ட வேண்டும். அதற்கு வாக்காளர்கள் தயாராக இருக்கவேண்டும். பழனிசாமி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி 0.07 சதவீதம்தான்.
ஆனால், இன்று தமிழகத்தின் வளர்ச்சி 11.19 சதவீதம். இந்தியாவுக்கே ரோல் மாடல் தமிழகம் என்று தலைநிமிர்ந்து சொல்லும் அளவுக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆவடி, வீராபுரத்தில், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவை என் குழந்தைபோல் கவனித்து பெரிய அறுவை சிகிச்சை செய்து, அவர் முகத்தில் அழகான புன்னகை தோன்றுவதைக் கண்டு இன்றைக்கும் நான் மகிழ்ச்சியடைந்து வருகிறேன்.
ஒவ்வொரு செயலிலும் தமிழகத்தை முன்னோக்கி அழைத்து கொண்டு போக வேண்டுமென தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நமது மாநிலம் பலரின் கண்களை உறுத்துகிறது.
பெயரைக்கூட தமிழ்நாடு என்று கூறக்கூடாது. தமிழகம் என்றுதான் அழைக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
பெயரை மட்டுமல்ல; நாங்கள் நினைத்தால் தமிழகத்தையே இரண்டாக உடைப்போம் என்று பாஜகவினர் திமிராகப் பேசினர். அவர்களுக்கு சவால்விட்டு சொல்கிறேன்.
இந்த ஸ்டாலின் உயிரோடு இருக்கும்வரை, திமுக இருக்கும்வரை பாஜகவால் தமிழகத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.