தவெக தலைவர் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ கோல வியூகம்!!

சென்னை:
தவெக தலைவர் விஜய்யின் வேண்டுகோளை ஏற்று பெண்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து அதை வித்தியாசமான அரசியல் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் முகத்தை விட, அவர்கள் போட்டியிடும் கட்சிசார்ந்த சின்னமே வாக்காளர்களின் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பது அரசியல் கணக்கு.

இதற்காகச் சுவர் விளம்பரங்கள், ஸ்டிக்கர்கள் எனப் பல உத்திகள் கையாளப்பட்டு வரும் நிலையில், விஜய் தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்தை மக்களிடம் பிரபல்யப்படுத்த நுணுக்கமான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “தேர்தல் நெருங்கிவிட்டது.

என் அன்புக்குரிய அம்மாக்கள், அக்காக்கள், தங்கை கள் அனைவரும் உங்கள் வீட்டு வாசலில் நமது ‘விசில்’ சின்னத்தை கோலமாக இடுங்கள். அது நீங்கள் எனக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்” என வேண்டுகோள் விடுத்தார்.

விஜய் இப்படி வேண்டுகோள் விடுத்த சில மணி நேரத்திலேயே, தமிழகம் முழுவதும் தவெக பெண் தொண்டர்கள் உற்சாகத்துடன் ‘விசில்’ சின்னத்தை வீட்டு வாசலில் கோலமாக வரைந்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக் கணக்கான வீடுகளின் வாசலில் வண்ணமயமான ‘விசில்’ கோலங்கள் மின்னத் தொடங்கின. மேலும், கோலத்தின் கீழே ‘எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கே’ என வாசகங்களை கோல மாவில் எழுதியும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, நேற்று காலை முதல் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இடப்பட்ட இந்த ‘விசில்’ கோலங்கள், புகைப்படங் களாகவும் வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வீட்டு வாசலில் இடப்படும் கோலம் என்பது தமிழர்களின் கலாசாரத்துடன் ஒன்றிய ஒன்று.

அதைத் தேர்தல் பிரச்சார உத்தியாக விஜய் மாற்றியிருப்பது அரசியல் களத்தில் இயங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை பெரம்பூரில் உள்ள தவெக தேர்தல் பணிமனைக்கு விஜய் திடீரென வருகை தந்தார்.

அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, பெண் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, பணிமனை வாசலில் பெண்களுடன் சேர்ந்து ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்து வாக்குச் சேகரித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *