ஈரோடு
பெண்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையில் திமுகவும் காங்கிரசும் தடுக்கின்றன.
இந்த சதிச்செயலை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா ஆவேசமாகப் பேசினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளராக கிருத்திகா போட்டியிடுகிறார்.
இவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வந்திருந்தார்.
சின்னியம்பாளையத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகில் இருந்து பிரச்சார வாகனத்தில், சிவகிரி கடைவீதியில் உள்ள தீரன் சின்னமலை சிலை வரை ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று பாஜக வேட்பாளர் கிருத்திகாவுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள என்டிஏ கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.
இக்கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல், கடத்தல் ஒழிக்கப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது.
அதிமுக ஆட்சி அமையும்போது தமிழகத்தின் இழந்த பெருமைகள் எல்லாம் மீட்டு எடுக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்பதுதான்.
இந்த குடும்ப ஆட்சியால் தமிழகத்துக்கு எந்த பயனும் இருக்கப் போவதில்லை.
தமிழக பெண்கள் சுயமாக அரசியலில் பங்கெடுக்கும் வகையில் மகளிர் மசோதாவை நாங்கள் மக்களவையில் கொண்டுவந்தோம்.
அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தடுக்கின்றன.
நாங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர்த்து, தமிழ்நாட்டுக்கு மறுசீரமைப்பில் 50 சதவீதம் புதிய தொகுதிகள் அமையவேண்டும் என முயற்சி எடுத்தோம்.
பெண்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து விடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையில் அதையும் திமுகவும் காங்கிரசும் தடுக்கின்றன. இந்த சதிச்செயலை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
கண்டிப்பாக இந்த மசோதா நிறைவேறும். தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
இந்த மண்ணை காக்கும்காவல் தெய்வங்களான பவானி அம்மனையும், சங்கமேஸ்வரரையும் நான் வணங்குகிறேன். பாஜக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.