அகமதாபாத்:
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது.
கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது.
குஜராத் அணி பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், கேப்டன் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர், ஷாருக் கான், ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர் என வலுவான வரிசையைப் பெற்றுள்ளது.
சிஎஸ்கே அணிக்கெதிரான கடந்த ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் 46 பந்துகளில் 87 ரன்களை விளாசினார்.
அதேபோல் ஷுப்மன் கில் 33, ஜாஸ் பட்லர் 39 ரன்களை விளாசி வெற்றி தேடித் தந்தனர்.
எனவே, அவர்களிடமிருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். பந்துவீச்சிலும் அந்த அணி பலம் மிகுந்து காணப்படுகிறது.
முகமது சிராஜ், காகிசோ ரபாடா, மானவ் சுதர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோர் எதிரணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் தரக்கூடியவர்கள்.
கடந்த ஆட்டத்தில் காகிசோ ரபாடா, சிஎஸ்கே அணியின் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அழுத்தம் கொடுத்தார். அதைப் போலவே அர்ஷத் கான் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் சிராஜ், ரபாடா, மானவ் சுதர், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படும்போது அது பெங்களூரு அணி வீரர்களுக்கு நிச்சயம் அழுத்தத்தை அதிகரிக்கும்.
அதேபோல், பெங்களூரு அணி இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.
இந்தத் தொடரில் இதுவரை உயர்தரமான செயல்திறனை பெங்களூரு அணி வீரர்கள் வெளிப்படுத்தி வெற்றியைக் கொண்டு வந்துள்ளனர்.
எனவே, இன்றைய ஆட்டத்திலும் குஜராத் அணிக்கெதிராக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. பெங்களூரு பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியை 75 ரன்களுக்குச் சுருட்டினர்.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ராசிக் சலாம் தர், சுயாஷ் சர்மா, கிருணல் பாண்டியா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை அள்ளினர்.
எனவே, இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும், பேட்டிங்கில் விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
குறிப்பாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் அதிக அளவில் ரன் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளனர். விராட் கோலி, படிக்கல், பட்டிதார், டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் நிச்சயம், குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை சிதறடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.