பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்ள கூடாது; வைகோ வேண்டுகோள்!!

சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1938 இல் மூண்டெழுந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1965 இல் மொழிப் புரட்சியாக வெடித்தது.

சிங்கத் தமிழன் சின்னச்சாமி, அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், மயிலாடுதுறை சாரங்கபாணி, பீளமேடு தண்டபாணி ஆகியோர் இந்தியை எதிர்க்க நெருப்பின் நாக்குகளுக்கு தங்கள் இன்னுயிரைத் தந்து பலியானார்கள்.

நூற்றுக் கணக்கான தமிழர்கள் இந்திய இராணுவத்தால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்தி எதிர்ப்பு உலைக்களத்தின் விளைவாக 1967 இல் பேரறிஞர் அண்ணா தமிழக முதல்-அமைச்சரானார்கள்.

கொடிய புற்று நோய் தாக்கியதால் மரணத்தின் விளிம்பில் வந்து நின்ற அறிவுலக மேதை அறிஞர் அண்ணா 1968 இன் தொடக்கத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டு விழாவில் கலந்துகொண்டு, திரண்டிருந்த தமிழர்கள் நெஞ்சம் விம்மி கண்ணீர் வடித்த போது “இந்திக்கு இனி எந்நாளும் தமிழ்நாட்டில் இடம் இல்லை.

தமிழும், ஆங்கிலமும் மட்டும்தான் இனிமேல் தமிழ்நாட்டில்; எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைப்பாட்டை மாற்றவே முடியாது; எந்நாளும் மாற்றவே முடியாது” என்று பிரகடனம் செய்தார்.

அதன்பின்னர் அமைந்த அனைத்து அரசுகளும் இன்றுவரை அறிஞர் அண்ணா தீர்க்க தரிசனமாகச் சொன்னதைக் கடைப்பிடித்து வருகின்றன.

தற்போது மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி அரசு, பி.எம்.ஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம் மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பை தமிழ்நாட்டில் புகுத்திவிட மூர்க்கத்தனமாக முனைகிறது.

இதை ஏற்றுக் கொண்டால் இந்தியை எதிர்ப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள், உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகமாகிவிடும்.

நீங்கள் அமைத்துள்ள அரசின் அமைச்சர் ராஜ்மோகன், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று கூறியது மனதுக்கு மிகவும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தந்தது.

இலட்சோப இலட்சம் இளைஞர்களும், மாணவர்களும் உங்கள் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டு உங்கள் வெற்றிக்காக பாடுபட்டிருக்கிறார்கள்.

உங்கள் அரசு மக்கள் அரசாக பரிணமிக்க வேண்டுமானால் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஒருபோதும் ஏற்கவே கூடாது.

அத்தகைய முடிவெடுக்கும் உங்கள் அரசுக்கு தமிழ் உணர்வாளர்கள் அரணாக தோள் கொடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *