தமிழகத்தில் திருச்சி, கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு!!

சென்னை:
தமிழகத்தில் திருச்சி, கோவை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக நாளை (மே 30) முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும், 2-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 3, 4 தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை (மே 30) திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 85 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சாக கன்னியா குமரி மாவட்டம் குளச்சலில் 12 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் ஆலப்புத்தூரில் 7 செமீ, செங்கம், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *