கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பைப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி மேஜிக் ஹாட்ரிக் சாதனையினால் அல்ஜீரியா அணியை அர்ஜெண்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 17, 60 மற்றும் 76வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சாதனை புரிந்தார்.
கான்சாஸ் சிட்டியில் உள்ள கேஹா ஃபீல்ட் அட் அரோஹெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மெஸ்ஸி அடித்த மூன்று கோல்களால், உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனையான 16 கோல்களை சமன் செய்தார்.
இது மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் 11-வது ஹாட்ரிக் ஆகும். ஆனால் உலகக் கோப்பை தொடரில் அவர் பதிவு செய்த முதல் ஹாட்ரிக் இதுவாகும். மேலும் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஹாட்ரிக் அடித்த அதிக வயதுடைய வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார்.
இரண்டாவது பாதியின் இறுதியில் அவர் வெளியேறியபோது, அர்ஜென்டினா ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்தப் போட்டி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கான 200-வது சர்வதேச ஆட்டமாகவும் அமைந்தது. அதோடு உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு தொடர்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன் ஐந்து உலகக் கோப்பைகளில் விளையாடிய சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ, அன்டோனியோ கார்பஹால், ஆண்ட்ரெஸ் கார்டாடோ, ரஃபேல் மார்க்வேஸ் (மெக்சிகோ) மற்றும் லோதர் மத்தேயுஸ் (ஜெர்மனி) பகிர்ந்து கொண்டுள்ளனர்.
போர்ச்சுகலின் முதல் போட்டியில் காங்கோவுக்கு எதிராக களமிறங்கும் ரொனால்டோ இந்தச் சாதனையை சமன் செய்ய உள்ள நிலையில், மெஸ்ஸி ஒரு நாள் முன்னதாகவே சாதனையைத் தனதாக்கினார்.
ஆட்டம் தொடங்கி முதல் கோலை மெஸ்ஸி அடித்தார் ஆனால் வலது புற லைன் நடுவர் அதை ஆஃப் சைடு என்றார். அதே போல் அல்ஜீரியா வீரர் ஃபரேஸ் சைபி அடித்த கோலும் ஆஃப் சைடினால் பறிபோனது.
போட்டியின் முதல் பாதியில் பெனால்டி பரப்புக்கு வெளியே இருந்து இடது காலால் துல்லியமான ஷாட் அடித்து மெஸ்ஸி அர்ஜென்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே அவர் கோல் அடித்தார்.
அவரது சக வீரரான ரோட்ரிகோ டி பால், 40 அடி தொலைவில் இருந்த மெஸ்ஸியிடம் பந்தைத் தள்ளினார், மெஸ்ஸி திரும்பி, தடுப்பாட்டக்காரர்கள் யாரும் இல்லாத நிலையில், பெனால்டி ஏரியாவின் விளிம்பிலிருந்து அவர் உதைத்த பந்து, அல்ஜீரியா கோல்கீப்பர் லூகா ஜிதானைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது. பந்து அவரது விரல் நுனியில் பட்டு கோலுக்குள் சென்றது.
அன்றைய ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த இரண்டாவது கோல், அவரது முதல் கோலை விடவும் மிக எளிதாக அமைந்தது.
அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 30 அடி தொலைவிலிருந்து அடித்த பந்தை கோல்கீப்பர் ஜிடேன் தடுத்தபோது, அது நேராக மெஸ்ஸியின் காலடியில் வந்து விழுந்தது; 60-வது நிமிடத்தில் மெஸ்ஸி மிக நிதானமாக அதை வலைக்குள் செலுத்தினார்.
பிறகு 76வது நிமிடத்தில் ஜாம்பவான் மெஸ்ஸி தனது தனித்துவமான பாணியில் மிக நேர்த்தியாக அடித்தார்; பந்து மூன்று தடுப்பாட்டக் காரர்களுக்கு இடையேயும், ஜிடேனின் கைக்கு எட்டாத வகையிலும் ஊடுருவிச் சென்றது.
அதன்பின் சில நிமிடங்களிலேயே அவர் ஆட்டத்திலிருந்து பலத்த கரகோஷங்களுக்கிடையே வெளியேறினார்.
உலகக் கோப்பையின் ஐந்து வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த வெற்றியால் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற வீரர்கள் பட்டியலிலும் மெஸ்ஸி, ஜெர்மனி வீரர் குளோஸுடன் இணைந்து 17 வெற்றிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
மேலும் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் கோல் அடித்த மெஸ்ஸியின் அபாரமான ஆட்டம் தொடர்கிறது.
இந்த நாளில் நார்வே அணிக்காக எர்லிங் ஹாலாந்த் மற்றும் பிரான்ஸ் அணிக்காக கிலியன் எம்பாப்பே தலா இரண்டு கோல்கள் அடித்திருந்தாலும், மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை நிறைந்த ஹாட்ரிக் அவர்களின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளியது.
குழு சுற்றின் அடுத்த ஆட்டத்தில் அர்ஜென்டினா ஜூன் 22 அன்று டல்லாஸில் ஆஸ்திரியாவை எதிர்கொள்கிறது.
அதன் பின்னர் தனது கடைசி குழு ஆட்டத்தில் ஜோர்டான் அணியை சந்திக்க உள்ளது.