கே.என்.நேரு மீதான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு: ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!! ஐகோர்ட் உத்தரவு…..

சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தவெக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள் ளதாக கூறி, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யாததை அடுத்து, அதிமுக எம்.பி.இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல வழக்குப் பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்படிருந்தன.

நீதிமன்ற அவமதிப்பு, மறு ஆய்வு மனு நிலுவையில் இருந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக நேரு தரப்பில் முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்கின் மீது இன்றைய தினம் வரை (ஜூன் 23 வரை) மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் உள்ளிட்டோர் தரப்பிலும், வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெறக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

ஆட்சி மாறினாலும், முந்தைய அரசு எடுத்த நிலைபாட்டுக்கு மாறாக தற்போதைய அரசு எடுத்துள்ள நிலைபாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், பிரதான வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என நேரு உள்ளிட்டோர் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து வாதிடப்பட்டது.

இதையடுத்து, நேரு உள்ளிட்டோரின் மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையையும், முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை வாபஸ் பெற அனுமதி கோரி தற்போதைய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் நீதிபதிகள், ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதுவரை இது சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் மீது மேல் நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவையும் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *