கோவை ;
தமிழ்நாடு முழுவதும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். நடப்பாண்டில் ஜூலை 16-ந்தேதி ஆடி மாதம் தொடங்க இருக்கிறது.
தமிழ்நாட்டில் நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் 9,483 மெகா வாட் திறனில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன. பொதுவாக மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலம் காற்றாலை சீசன் ஆகும்.
இந்த காலக்கட்டத்தில் காற்றாலைகளின் மூலம் சராசரியாக 7 கோடி யூனிட்டுகள் முதல் 8 கோடி யூனிட்டுகள் மின்சாரம் கிடைக்கிறது.
இந்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்வாரியம் முழுமையாக பயன்படுத்தி வரும் நிலையில், ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் கொள்முதல் ரூ.4 என்ற அளவில் இருக்கிறது.
உடுமலை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கற்றாலை மின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஆடி மாதம் தொடங்க இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில், தற்போதே காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி அதிகரித்து இருப்பது தொழிற்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து வரும் காலங்களில் மேலும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.