அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி கண்டனம்!!

சென்னை:
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி கனிமொழி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “முதலவரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளது ‘டேக் டைவர்ஷன்’ அரசு.

தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில் லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரை பேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து, விமர்சிக் கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதல்வர். ஆணவம் அழிவுக்கு வழி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில், “முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை, தவெக அரசின் காவல் துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு.

இதுபோன்ற அடக்குமுறைக ளுக்கு எல்லாம் ஒருபோதும் திமுக அடிபணியாது” என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல் துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் – ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது சோஃபா மாடல் அரசு.

அவதூறு பேசி – பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொய் வழக்காலும் – கைது நடவடிக்கைகளாலும் திமுகவை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த ரீல்ஸ் அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது” என்று கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *