தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா ? சீமான் கேள்வி!!

சென்னை:
‘தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது அரசுப் பள்ளிக ளுக்கும் அமைச்சரா?

தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத் தவறுவது ஏன்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் பள்ளிகளு க்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணைய தளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.

பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா?

தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குதான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா?

தனியார் பள்ளிகள் எந்த அளவுக்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?

உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப் பள்ளிகள் நடத்துவது பாவக் கணக்கா?

அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர், எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா?

தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர்.

முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக் கணக்கான பள்ளிகள் உள்ளன.

பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன.

தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப் பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?

தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் பணி உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலை யில் அவர்களின் துயர் துடைத்து அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தனியார் பள்ளிகள் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா?

தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

ஆகவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *