தன்னுடைய நேரடிக்கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? – விஜய்க்கு சீமான் கண்டனம்!!

சென்னை:
”நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னு டைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்?”

என்று சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைத்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தனியார் நிறுவனம் குடிநீர் விநியோகத்தை சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? எனவும் முதல்வர் விஜய்க்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும்.

காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும்.

தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத ஜனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்கு தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்?.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தை சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா?.

ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *