சென்னை:
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் குதிரை பேர அரசியல் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: தமிழகத்தில் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான் எனது கோரிக்கை. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தற்போது நடைபெறும் குதிரை பேரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அதற்கு பத்து பதினைந்து கட்சிகளின் பிரதிநிதிகள், அக்கட்சியின் தலைவர்களை அழைத்துக் கொண்டு சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரே சந்திக்க வேண்டும். அதோடு டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தையும் சந்திக்க வேண்டும்.
ஒரு அசாதாரணமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இதனை வளரவிட்டால் நிச்சயம் இந்தியாவுக்கே தவறான வழிகாட்டுதலுக்கு வழிவகுக்கும்.
ஆதாயம் மற்றும் பதவியை தேடி எதிர்தரப்பில் இருந்து ஆளும் கட்சிக்கு செல்வதை தடை செய்யும் வகையில் அல்லது இப்பிரச் சினைக்கு தீர்வு காணும் வகையில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
ஜூலை 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வலியுறுத்து கிறோம். திமுக, அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் மெல்ல மெல்ல பெருகி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இருப்பதாக தவெக அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எளிதில் அணுக முடியாத வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
இதை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் ஒரு மாரத்தான் நடத்த இருக்கிறோம். இது அரசியல் சார்பற்றதாக இருக்கும்.
இதை ஆளுநர் தொடங்கி வைக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
தவெக அரசு அம்மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணத்தின் போது எந்த அரசியல் சார்ந்த ரகசியங்களையும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு பிரசாத் ஆகியோர் தலைமைச் செயலகத்திலேயே பங்கு பெற்றுள்ளனர்.
இது குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் சொல்லியுள்ளோம்
தமிழக முதல்வரை சந்திக்க வடிகட்டி தான் அனுப்புகிறார்கள். மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்தை தான் கொடுக்கிறார்கள்.
பிரபலமாக இருப்பவர்கள் தான் முதல்வரை எளிதாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். பிரச்சனைகளை கொண்டு செல்பவர்களை அவர் சந்திக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.