ஜூலை 16-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை !!

சென்னை:
தவெக அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்றது.

அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பொதுமக்களைக் கவரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதன்படி, புதிய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல் வேறு துறைகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2-ம் தேதி தொடங்கி துறைவாரியான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டங்கள் ஜூலை 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில் முதல்வர் விஜய் தலைமையில் 2-வது அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூலை 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

மேலும், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 வழங்குதல் உள்ளிட்ட சில தேர்தல் வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச் சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக் கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *