டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு…

‘கே.ஜி.எஃப்’ திரைப்பட வரிசைகளின் உலகளாவிய பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகின் ‘ராக்ஸ்டார்’ யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ‘டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாவது ரொமாண்டிக் பாடலான ‘தடுமாறுதே’ லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் முந்தைய ‘தபாகி’ ஆக்ஷன் பாடல் தந்த அதிரடியான வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாவது பாடலில் யஷ் மற்றும் தாரா சுதாரியா இடையே உள்ள ஆழமான காதல் உணர்வுகளும், வசீகரமான திரைக் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

இப்பாடலுக்குத் தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகிய மூவர் கூட்டணி மனதை மயக்கும் வகையில் இசையமைத்துள்ளது.

பாடகர் சித்தார்த் பஸ்ரூர் தனது வசீகரக் குரலால் தமிழ்ப் பதிப்பைப் பாடியுள்ளார். இப்பாடலின் தமிழ்ப் பதிப்பிற்குப் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளை எழுதியுள்ளார்.

“பெரும் புயலும் என்னை தீண்டாதே… புவி ஈர்க்கும் விசை என்னை தள்ளாதே… இவை எல்லாமே இன்று என்னை கைவிட்டதே…” எனத் தொடங்கும் காதல் வரிகள் இப்பாடலுக்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளன.


திரைப்படத்தில் ‘ராயா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் யஷ் மற்றும் ‘ரெபெக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தாரா சுதாரியா ஆகியோரின் காதல் தருணங்களை அழகாகப் படம்பிடித்துள்ள இப்பாடல் வீடியோவில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகை நயன்தாரா ஆகியோரின் முக்கியக் காட்சிகளும் இடம்பெற்று கதையின் மீதான சுவாரசியத்தை அதிகரித்துள்ளன.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணை தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் யஷ், தாரா சுதாரியா, நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைக்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26, 2026 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *