கொல்கத்தா:
நாட்டின் குறைந்த சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் உமர் அப்துல்லா முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி 2-ம் இடமும் பிடித்துள்ளனர்.
மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் பிரமாணப் பத்திரங்களை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த ஆய்வின்படி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55.24 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுடன் நாட்டிலேயே மிகக் குறைந்த சொத்துடைய முதல்வராக உள்ளார்.
நாட்டின் முதல்வர்களிலேயே மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி இரண்டாவது மிகக் குறைந்த சொத்துள்ள முதல்வராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.85.87 லட்சம் ஆகும்.
சிவகுமாருக்கு அதிக சொத்து: அவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ரூ.1.03 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
இதற்கு நேர்மாறாக, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் அதிக சொத்துடைய முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆய்வு செய்யப்பட்ட 31 முதல்வர்களில் 4 பேர் (13 சதவீதம்) ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகளைக் கொண்டுள்ளனர். மேலும், நாட்டில் உள்ள 31 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.118.07 கோடியாக உள்ளது.