தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு!!

சென்னை:
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை:

தமிழக அரசின் கட்டுப்பாட் டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மாநில அளவில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழுவின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குழுவை அமைக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதையேற்று ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் வரும் கோயில்களுக்கு ‘பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை’ தேர்வு செய்து பரிந்துரைக்க புதிய மாநிலக் குழு அமைக்கப்பட் டுள்ளது.

இதன் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், துணைத் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குழுவின் உறுப்பினர் செயலராக அறநிலையத் துறை ஆணையர் திகழ்வார்.

குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பின்னணி பாடகர் த.வேல்முருகன், ஆன்மிகப் பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் வரும் கோயில்களுக்கு தகுதியான அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரை பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *