மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? – மரிய வில்சன் பதில்!!

சென்னை:
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் (கீழ்பென்னாத் தூர்) பேசியதாவது:

தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்புகளும் இல்லை.

தமிழக அரசின் நிதிநிலைமை சரியாக குறைந்தபட்சம் 2 ஆண்டு ஆகும் என கூறியுள்ளீர்கள். அப்படியானால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் காலநிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி கடன் வாங்கியு ள்ளீர்கள். கடன் வாங்க மாட்டோம் என்ற உங்களின் தேர்தல் நிலைப்பாடு என்ன ஆனது? பட்ஜெட்டில் ஓய்வூதியத்துக்கான நிதி ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டு்ம் இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதில் அளித்து நிதி அமைச்சர் மரியவில்சன் பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி குழு, தமிழக அரசு கூடுதல் கடன் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தால் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை (டேப்ஸ்) நடைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை வழங்கியது.

அதன் அடிப்படையில் முந்தைய திமுக அரசு ஓய்வூதியத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியிருந்தது. தமிழக அரசு கூடுதல் கடன் வாங்க மத்திய அரசு அனுமதி அளித்தால் டேப்ஸ் திட்டத்தை செயல்படுத்த முடியும்.

இதற்கிடையில்,டேப்ஸ் திட்ட இறுதி விதிகள் வெளியாகும் வரை ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

மத்திய அரசு கூடுதல் கடன் வாங்க அனுமதி அளித்து டேப்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் துணை பட்ஜெட்டில் ஓய்வூதியத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த நிதியமைச்சர், ‘‘திமுகவைவிட அதிக கடனை பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில் பெறப்பட்ட கடன் தொகை ரூ.20,881 கோடியாகும். இது ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.40 லட்சத்து 67,312 கோடியில் 0.51 சதவீதமாகும்.

முந்தைய திமுக ஆட்சியில் 2025-26-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.19,337 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இது அப்போதைய ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.35 லட்சத்து 67,818 கோடியில் 0.54 சதவீதமாகும்.

எனவே, ஜிஎஸ்டி வரி வருவாய் விகிதப்படி பார்த்தால் திமுகவைவிட 0.03 சதவீதம் குறைவாகத்தான் கடன் வாங்கியிருக்கிறோம்’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *