சென்னை:
“ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து கொடூர மாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பூசாரி பரமசிவத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்தத் தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற் பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 19-ஆம் தேதி அழைத்துச் சென்ற சிந்தாமணி காவல் நிலையக் காவலர்கள், அவரை கொடூரமாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்ட பரமசிவம் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்திருக்கிறார்.
காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொலியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத் திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இது வரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.
காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.