புகாரைத் திரும்பப் பெறக் கோரி கொலை மிரட்டல் விடுக்கும் தவெக தூத்துக்குடி மாவட்ட, நகரச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜியிடம் பெண் நிர்வாகி புகார்!!

மதுரை:
புகாரைத் திரும்பப் பெறக் கோரி கொலை மிரட்டல் விடுக்கும் தவெக தூத்துக்குடி மாவட்ட, நகரச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியின் பெண் நிர்வாகி ரோகிணி, தென்மண்டல ஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ரோகிணி, தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், தனது வழக்கறிஞர் செல்வத்துடன் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரியிடம் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி தவெக நகரச் செயலாளர் நிவாஷ் கண்ணன் ஆகியோர் ஆபாச வார்த்தைகளை எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி பாலியல் தொந்தரவு செய்தனர்.

இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் பிரைட்டரிடம் தெரிவித்தும் பலன் இல்லை. கடந்த 13-ம் தேதி ரூஸ்வெல்ட், நிவாஷ் கண்ணன், பிரைட்டர் மீது தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 17-ம் தேதி நான் வீட்டில் இருந்தபோது, பிரைட்டர் அனுப்பிய வழக்கறிஞர் எனக் கூறி மகாராஜன் என்பவர் எனது வீட்டுக்கு இரவு 11 மணிக்கு வந்தார். அவர், புகார்களை திரும்பப் பெறவேண்டும் என மிரட்டினார்.

ஆக.18-ம் தேதி காலை என்னை மிரட்டிய அவரும், நிவாஷ் கண்ணனும் பிரைட்டர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கு 3 பேரும் மிரட்டினர்.

வெற்றுக் காகிதத்திலும் கையெழுத்துப் பெற்றனர். மேலும், பிரைட்டருக்கு சால்வை அணிவிக்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

‘எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் தூத்துக்குடியில் வாழவிடமாட்டோம்.

எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரை திரும்பப் பெறவேண்டும்’ என கொலை மிரட்டல் விடுத்தனர்.

என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பி, பொய் வழக்குப் போட்டு அசிங்கப்படுத்துவோம் என்றும் தொடர்ந்து மிரட்டுகின்றனர்.

இதற்கிடையே, தவெக வாட்ஸ்அப் குழுவில் மாவட்டச் செயலாளரைப் பார்த்து அனைத்து புகார்களையும் நான் திரும்பப் பெற்றுக் கொண்டதாக நேற்று தவறான தகவலைப் பரப்பினர்.

எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் பிரைட்டர், நிவாஷ் கண்ணன், மகாராஜன், போர்ஜியா, வளன், ரூஸ்வெல்ட் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *