விருதுநகர்:
“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்களையும் வேட்பாளர்களையும் அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நவாஸ்கன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் கட்சியின் மாநில துணைத் தலைவரும் வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி எம்.பி. தலைமையில் இன்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு, இந்த மண்டலத்தின் பொறுப்பாளராக கட்சித் தலைவர் என்னை நியமித்துள்ளார்.
10 மாவட்டங்களிலும் பொதுக்குழு நடத்தி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கன இடங்களை தேர்வு செய்து, அடையாளம் கண்டு அதற்கான வேட்பாளர்களையும் அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படியில், விருதுநகர் வடக்கு மாவட்ட பொதுக்குழு இன்று நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை சதவிகித இடங்களைக் கேட்டுப் பெறுவது என்றெல்லாம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
தவெக-விடமும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து இதுவரை நாங்கள் பேசவில்லை.
எங்களது தலைவர் அடிப்படை பணிகளையும் கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
வக்பு வாரிய சொத்துக்களை மீட்க சட்டப் பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
விருதுநகரில் பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு சொத்துக்கள் கூட ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறிந்து சட்டப்படி எங்கள் சொத்துக்களாக மாற்றியுள்ளோம்.
சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு வக்பு வாரிய சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ளன. மற்றவர்களின் அனுபவத்தில் உள்ள இடங்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை மீட்டுக்கொண்டிருக்கிறோம்.
வக்பு சொத்துக்கள் அல்லாத மற்ற பெயரில் உள்ள சொத்துக்களை வக்பு பெயரில் மாற்ற தடையிருந்தால் அதையெல்லாம் நீக்கி வருகிறோம்.
நீதிமன்றங்கள் மூலமாகவும் வக்பு தீர்பாயம் மூலமாகவும் வழக்குகள் தொடரப்பட்டு ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்டு வருகிறோம். பூந்தமல்லியிலும் தற்போது ஒரு சொத்து மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள சொத்துக்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துவிடாமல் அதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்தும், அதன் மூலம் வருவாயை பெருக்குவதற்கும் திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறோம்.
மீனம்பாக்கம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க திமுக அரசு நில எடுப்பில் ஈடுபட்டது.
விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். முதல்வரை நேரடியாக சந்தித்து முறையிட்டனர்.
தற்போது இருக்கக் கூடிய விமான நிலையத்தை விட்டு புதிய முனையம் கட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மாற்று இடமும் அடையாளம் காணப்படும் என்றும், விவசாயிகளை பாதிக்காத வகையில் இடம் தேர்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். வரும் காலங்களில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவார்கள்.
கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பிறகு, நாங்கள் இல்லாமல் நீங்கள் வெற்றி பெற முடியாது என்றெல்லாம் கூறுவது ஏற்புடையது அல்ல” என்று நவாஸ்கன் எம்.பி கூறினார்.