மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத் துக்கு முதல்வர் செப்.1-ம் தேதி தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாக தகவல்!!

மேட்டூர்/ தருமபுரி:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் செப்.1-ம் தேதி தண்ணீர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனிடையே, காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் செப்.1-ம் தேதி தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையொட்டி மேட்டூர் அணையில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அணையின் வலது கரை, மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் பகுதி, அணைப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆட்சியர் இளம்பகவத், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி தலைமையில் டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, எஸ்பி குத்தாலிங்கம் ஆய்வு செய்தனர்.

முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும் அணையின் வலது, இடது கரைகள் மற்றும் 16 கண் மதகு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, அணையில் வண்ணம் பூசுதல், மேல்மட்ட மதகுகளின் இயக்கத்தைச் சரிபார்த்தல், நீர் செல்லும் பகுதிகளில் உள்ள புற்கள் மற்றும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,405 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 8,827 கனஅடியாகக் குறைந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் வெளியேற்றத்தைவிட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தற்போது அணையின் நீர்மட்டம் 89.01 அடியாகவும், நீர் இருப்பு 51.52 டிஎம்சியாகவும் உள்ளது.

இதேபோல் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. அதேநேரம் நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மதியம் 2 மணியளவில் மேலும் குறைந்து விநாடிக்கு 6,500 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *