திருப்பத்தூர்:
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
திருப்பத்தூரில் நடந்த கட்சியின் மாவட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
திருப்பத்தூரை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேநேரத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும்போது விவசாயிகள் துன்புறுத்தப்படக் கூடாது.
மேலும் சிறு, குறு தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகவும் ஆட்சியாளர்கள் உரிய திட்டங்களை கொண்டுவர வேண்டும். டெட் தகுதி தேர்வில் இருந்து பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதையும் வரவேற்கிறோம்.
மேகமலையில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தக் கூடாது. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும்.
காவிரி நீர் மேலாண்மை குழு உரிமையின் அடிப்படையில் எவ்வித காலதாமதமும் இல்லாமல் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் வழங்க வேண்டும். மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது.
தமிழக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் வரவேற்கும்.
அதேநேரம் பொதுமக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் வந்தால் எதிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.