நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி!!

துபாய்:
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

இந்த தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமை யிலான இந்திய அணி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

அரையிறுதியில் வங்கதேசத்துடன் இந்திய அணி நேற்று (வியாழக்கிழமை) விளையாடியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷெபாலி வர்மா 40 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.

3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். பிரதிகா ராவல் 20, கேப்டன் ஹர்மன்பிரீத் 24, ரிச்சா கோஷ் 21 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது.

அந்த அணியின் வீராங்கனைகள் சீரான முறையில் ரன் சேர்க்க தவறியதோடு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே வங்கதேச அணியால் எடுக்க முடிந்தது. அதனால் 40 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. ஷெபாலி வர்மா, பிளேயர் ஆப் தி மேட்ச் விருதை வென்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 3, நந்தினி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஆதிக்கம்

கடந்த 2004-ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதில் ஒருநாள் கிரிக்கெட் (50 ஓவர்கள்) பார்மெட்டில் நான்கு முறையும், டி20 கிரிக்கெட் பார்மெட்டில் மூன்று முறையும் இந்தியா பட்டம் வென்றுள்ளது.

இப்போது மீண்டும் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று (செப்.11) இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு ஆண்டு இந்திய அணி உடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்ளும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *