2026 புரட்டாசி மாத ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் உடல்நலனில் கவனம் தேவை.

இருப்பினும் அவரது பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். நல்லகாரியம் இல்லத்தில் நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்தைப் பெறுவர்.

இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும்.

விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். குரு கவசம் பாடி குரு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

கடக-செவ்வாய்

புரட்டாசி மாதம் 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

பழைய சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பதவி உயர்வு. உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறி தென்படும்.

வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டு வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் லாப ஸ்தானத்தில் இருக்கும் சுக்ரனோடு இணைந்து ‘புத சுக்ர யோக’த்தை உருவாக்குகிறார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வருமானம் உயரும்.

வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உங்களுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ திருமணத் தடை இருந்தால் அது விலகும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

வெளிநாட்டில் பணிபுரிய வேண்டுமென்று நினைத்தவர் களுக்கு, அந்த முயற்சி கைகூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்ற நண்பர்கள் உறுதுணைபுரிவர்.

அசையாச் சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து, யாருக்கு செவ்வாய் பலம் நன்றாக இருக்கின்றதோ அவர்களின் பெயரில் சொத்து வாங்குவது நல்லது.

மீன-சனி

மீன ராசியில் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவர் மீது உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிகிறது. எனவே அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

வாகனங்களால் தொல்லை வரலாம். வாகன மாற்றம் செய்துகொள்வது நல்லது. தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். இடம், பூமி விற்பனை எளிதில் முடிவடைவ துடன். லாபமும் கிடைக்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் ஆதாயம் கிடைக்கும் நேரம் இது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு குறையும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும்.

மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்- ஆசிரியரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு அசையாச் சொத்துக்கள் சேரும். வருமானம் போது மானதாக இருக்கும்.

மகர ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம்.

இருப்பினும் சனி பகவானை குரு பார்ப்பதால், முயற்சிகளின் முடிவில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப்பாதையில் பிரச்சினைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.

எதையும் திறம்படச் செய்து வெற்றிகாணும் நீங்கள், இம்மாதம் கொஞ்சம் நிதானமாகவே செயல்படுவது நல்லது.

நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் பொழுது, குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். சனி வக்ர நிவர்த்தியாகும் வரை கொஞ்சம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறும் போது, தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இடம், பூமியால் பிரச்சினைகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வரக்கூடிய லாபத்தில் பங்குதாரர்களின் குறுக்கீடு ஏற்படும். லாபம் ஏட்டில் இருந்தும் எதிரில் இருக்காது.

கூட்டு முயற்சியில் இருந்து தனித்து இயங்க முற்படுவீர்கள். ‘கொடுக்கல் வாங்கல்களில் யாரையும் நம்பி செயல்பட முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.

வெப்ப நோய்க்கு ஆட்பட நேரிடும். தைரியமும், தன்னம்பிக்கையும் குறையலாம். வியாபார விரோதங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 6. 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம் தான்.

அங்கு சுக்ரனோடு இணைந்து ‘புத சுக்ர யோக’த்தை உருவாக்குவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். தொழில் கூட்டாளிகள் இணைந்து செயல்படுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கட்டிடம் கட்டுவது அல்லது வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இக்காலத்தில் குரு மங்கலயோகமும் செயல்படுவதால் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு நடைபெறும்.

உடன்பிறப்புகளுக்கோ, உங்களுக்கோ திருமண முயற்சி நடந்தால், அது கைகூடும். புதிய முதலீடுகளால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நட்பாலும் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் பழக்கத்தால் கேட்ட உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும் நேரம் இது. புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணி அமையும்.

மீன – சனி

மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் உள்ளார்.

அவரை கடகத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் பார்க்கின்றார். இதனால் ஓரளவு நன்மை கிடைக்கும். என்றாலும் உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். ‘நினைத்ததை செய்ய முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் வந்த மறுநிமிடமே செலவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுசரிப்பு குறையும்.

கலைஞர்களுக்கு அதிக முயற்சி தேவை. மாணவ – மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வரவை விடச் செலவு கூடும். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே!

பராபவ வருடம் புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ராகு சஞ்சரிக்கின்றார்.

சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகு-கேதுவின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். 2-ல் சனி வக்ரம் பெற்றிருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நேரம் இது.

மனக்குழப்பம் அதிகரிக்கலாம். 6-ல் குரு இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றும்.

இதுபோன்ற நேரங்களில் பொறுமையும், நிதானமும் அவசியம்.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார்.

உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவதால் தொழிலில் குறுக்கீடுகள் வரலாம்.

போட்டிக்கடை வைத்திருப்போரை அனுசரித்துச்செல்வது நல்லது. பாக்கிகள் வசூலாகவில்லையே என்ற கவலை அதிகரிக்கும். தேக்கநிலையில் தெளிவற்ற சூழல் உருவாகலாம்.

தைரியமும், தன்னம்பிக்கையும் தேவைப்படும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் ஏற்படலாம். உடன் பிறப்புகளின் அனுசரிப்பு குறையும். கடன் பிரச்சினை தீர ஏதேனும் ஒரு சொத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம்.

இதுபோன்ற நேரங்களில் குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மையை வழங்கும்.

துலாம் – புதன்

உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அங்கு சுக்ரனோடு இணைந்து ‘புத சுக்ர யோக த்தை உருவாக்கும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும்.

இக்காலத்தில் ஓரளவு பொருளாதாரம் உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை. பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியைப் பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீடு கட்ட, வாகனம் வாங்க கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

அதிகாரிகள் உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பர். பணிநீக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு, மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மீன – சனி

உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், தன ஸ்தானமான மீன ராசியில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். விரயாதிபதி சனி வக்ரம் பெறுவது நன்மைதான்.

ஆனால் உங்கள் ராசிநாதனான சனி வக்ரம் பெறுவது உடல் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மனவருத்தம் அதிகரிக்கும்.

எந்த ஒரு காரியமாக இருந்தாலும் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான சிந்தனை தோன்றும். இதுபோன்ற நேரங்களில் அனுமனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்டி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் தேங்கி நிற்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்களின் பிரச்சினைகளை சமாளிக்க நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வரவும், செலவும் சமமாகும்.

மீன ராசி நேயர்களே!

பராபவ வருடம் புராட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான்.

என்றாலும் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதோடு அவர் மீது சூரியனின் பார்வையும் பதிகிறது. எனவே மனவருத்தம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நேரத்தில் கசப்பான தகவல்களும் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

திடீர் திடீரென விரயங்கள் அதிகரிக்கும். தெய்வபலம் ஒன்றே உங்களை பாதுகாக்கும் என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி என்பதால், வரவு செலவில் கவனம் தேவை.

கடக-செவ்வாய்

புரட்டாசி 3-ந் தேதி (20.9.2026) அன்று கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனப்போராட்டம், பணப்போராட்டம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ளமாட்டார்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். பூர்வீகச் சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும்.

பொதுவாழ்வில் திடீரென மாற்றப்பட்ட பொறுப்புகளால் மனக்கலக்கம் உண்டாகும். சகோதர ஒற்றுமை குறையும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

துலாம்-புதன்

உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், புரட்டாசி 6-ந் தேதி (23.9.2026) அன்று துலாம் ராசிக்குச் செல்கிறார். அவர் அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரனோடு இணைந்து ‘புத சுக்ர யோக’த்தை உருவாக்குகிறார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதாரம் உயரும்.

மாற்றமும், ஏற்றமும் வந்துசேரும். பேச்சாலும், செயலாலும் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வசதிகள் பெருகும். வருமானம் உயரும்.

ராஜயோகம் தேடிவரும் நேரம் இது. பிள்ளைகளைப் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

அவர்களின் மேற்படிப்பு. திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு உகந்த நேரம் இது.

மீன-சனி

மீன ராசியில் சனி வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அவர் வக்ரம்பெறுவதால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கு பவர் சனி பகவான். எனவே விரயாதிபதி வக்ரம் பெறுவது நல்லதுதான்.

என்றாலும் லாபாதிபதியாகவும் இருப்பதால் பொருளாதாரத்தில் திடீர், திடீரென பிரச்சினைகள் உருவாகலாம். காரியத்தை தொடங்கி முடிக்க முடியாமல் தடுமாறும் சூழ்நிலை ஏற்படும்.

ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வது அரிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வு பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் ஒப்பந்தம் கிடைக்கும். மாணவ மாணவிகள் முயற்சியோடு படித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். பெண்கள் ‘தான் உண்டு…

தன் வேலை உண்டு..’ என்று இருப்பது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *