தாராபுரம்:
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தமிழக அரசியலில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆளும் தவெக மற்றும் கடந்த தேர்தலில் வென்ற அதிமுகவின் சவால்களை எதிர்கொள்ளவும், திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யவும் திமுக தலைமை மூத்த தலைவர்களைக் களமிறக்கியுள்ளது.
தாராபுரம் தொகுதியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, வி.செந்தில்பாலாஜி, அர.சக்கரபாணி, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முகாமிட்டு தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாராபுரம் தொகுதியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, திமுக மேலிடம் ஒவ்வொரு மூத்த நிர்வாகிகளுக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்கி வியூகம் வகுத்துள்ளது.
தாராபுரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் வாரியாகக் கட்சியை ஒருங்கிணைக்க மூத்த நிர்வாகிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக வேட்பாளருக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து திமுக அரசின் நலத்திட்டங்களை விளக்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் குறிப்பாக வேளாண் துறை சார்ந்த நலத்திட்டங்களை வாக்காளர்களின் இல்லங்கள் தோறும் கொண்டு சேர்க்கவும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக அனுபவமிக்க ஒன்றிய செயலாளர் நிலையில் உள்ள நிர்வாகிகளை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தவெக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு உடனுக்குடன் புள்ளி விவரங்களுடன் கூடிய பதில்களை அளித்து பிரசாரக் களத்தில் ஆதிக்கம் செலுத்தவும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர்களின் ஒருங்கிணைந்த தேர்தல் வியூகம் திமுக வேட்பாளரின் வெற்றியை எவ்வளவு தூரம் உறுதி செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.