புதுடெல்லி:
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியாவால் உடனடியாக நிறுத்த முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் குறித்த லிண்ட்சே ஓ. கிரஹாம் சட்டத்தை அமெரிக்க அரசு அமலாக்கியுள்ளது.
இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான பொருட்களுக்கு அமெரிக்காவில் 100% வரி விதிக்கும் அபாயம் உள்ளது.
இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை உடனடியாக நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும்.
ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்திவிட்டு, வேறு எங்கிருந்தாவது எண்ணெய் வாங்கலாம் என்று முடிவு செய்யலாம்.
ஆனால், அப்படி வெளியேறிய உடனேயே, ஏற்கெனவே குறைவாக உள்ள விநியோகத்துக்கான விலை உயரும். இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு கடுமையான சவாலாக இருக்கும்.
எனவே, நம் நாட்டின் நலன்களுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கருதுகிறேன். நமது நாட்டின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கொள்முதல் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.