அரசியலில் எவ்வளவு அதிகாரம் பெற்றாலும், பாஜகவின் அடிப்படைப் பாதை சேவையாகவே இருக்கும் என்பதை நமது செயல்பாடுகள் காட்ட வேண்டும்; பிரதமர் மோடி!!

புதுடெல்லி:
சேவையே பாஜகவின் வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, சேவைப் பாதையில் இருந்து கட்சி ஒருபோதும் விலகாது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்த தினம் மற்றும் அவரது 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குஜராத்தின் வத்நகரில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி வரை சேவைக்கான உறுதிமொழி யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அவர்களுடன் பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாடினார்.

அப்போது அவர், “குஜராத் முதல் டெல்லி வரை சேவையே பாஜகவின் நிர்வாகம் மற்றும் விழுமியங்களின் மையமாக இருந்து வருகிறது. சேவை, நிர்வாகத்தின் மையமாக இருக்கும்போது, மக்களே தெய்வம் என்ற உறுதிமொழி ஒவ்வொரு கொள்கையின் மையமாகவும் அமைகிறது.

அரசியலில் எவ்வளவு அதிகாரம் பெற்றாலும், பாஜகவின் அடிப்படைப் பாதை சேவையாகவே இருக்கும் என்பதை நமது செயல்பாடுகள் காட்ட வேண்டும்.

எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் நாம் அதில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்.

சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் பணிகளை மக்கள் நினைவில் கொள்கிறார்கள். சேவை செய்பவர்களை மக்கள் ஆசீர்வதிக்கிறார்கள்.

எனது முழு வாழ்க்கையும் மக்களின் ஆசீர்வாதத்தால் நிலைத்திருக்கிறது. அவர்களின் ஆசீர்வாதங்களே எனது மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இருந்து வருகிறது.

சேவைக்கான உறுதிமொழிப் பயணத்தை மேற்கொள்ளும் நீங்கள் சேவையை உங்கள் முதன்மை நோக்கமாகக் கொள்ள வேண்டும். சேவை குறித்த செய்தியை நீங்கள் வெறும் உபதேசம் மூலமாக அல்லாமல், செயல்கள் மூலமே பரப்ப வேண்டும்.

மக்களுக்குச் சேவை செய்யுங்கள். உங்கள் நடத்தையே சேவைக்கான செய்தியை வெளிப்படுத்தட்டும். சேவையே உயர்ந்த அறம் என்ற உணர்வுடன் நாம் முன்னோக்கிச் செல்வோம்” என தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது, பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு மோடி ஃபாலியா என பெயரிடப்பட்டுள்ளதாக பங்கேற்பாளர் ஒருவர் பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

ஜென் ஸி தலைமுறையினர் அனைவரும் மோடிக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *