சென்னை:
மாநகராட்சி நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து அம்மா உணவக ஊழியர்கள் நேற்று கருப்பு உடை அணிந்து பணிக்கு வந்தனர்.
அம்மா உணவக ஊழியர்களுக்கு கடந்த 2013-ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியமே 2021-ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு சிறு தொகை ஊதிய உயர்வாக வழங்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஆர்.லோகநாதன், அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கோரி மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்களில், அம்மா உணவக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த அம்சமும் இல்லை.
இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அம்மா உணவக ஊழியர்கள் பலர் கருப்பு உடை அணிந்து நேற்று பணிக்கு வந்திருந்தனர்.