சென்னை:
தற்காலிக முறையில் செவிலியர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து, வரும் 28-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் செயலர் சுபின் கூறியதாவது:
புதிய செவிலியர் மருத்துவக் கல்லூரிகள் கட்ட ரூ.270 கோடி உட்பட பல்வேறு பணிகளுக்கான நிதியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்தான் திரட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால், அதற்கு நியமிக்கப்படும் பணியிடங்களுக்கும் தற்காலிக முறையில்தான் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது, 4,724 செவிலியர்கள் தற்காலிக முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒப்பந்த பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தேர்தலின் போது தவெக அரசு வாக்குறுதி அளித்திருந்தது.
தற்போது அனைத்து பணியையும் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக முறையில் நியமித்து வருகிறது.
இதனைக் கண்டித்தும், நிரந்தர அடிப்படையில் பணி நியமனத்தை வலியுறுத்தி வரும் 28, 29-ம் தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற இருக்கிறோம்.
சென்னை சிவானந்தா சாலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 30-ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.